மழைநீருடன் கலந்து வந்த கழிவு நீர்; பெங்களூர் மக்கள் வேதனை

பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் கழிவுநீரும் கலந்தது. குப்பைகள் அடித்து வரப்பட்டது.

இமைதயடுத்து மாநகராட்சியின் மோசமான நிர்வாகத்தை கண்டு கோபமடைந்த நெட்டிசன்கள், மாநகராட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வானிலை மைய தகவல்படி அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 13.2 மி.மீ, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 7.7 மி.மீ., எச்ஏஎல் விமான நிலையத்தில் 1.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், ஏராளமான சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் வெள்ளநீரில் கார்கள் இழுத்து செல்லப்பட்டன.

ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மைசூரு, சில்க்போர்ட் சந்திப்பு, ஓசூர் சாலை, பேனர்கட்டா சாலை, பசவனகுடி, நயன்தஹல்லி, ஆர்ஆர் நகர், பிஜி சாலை, உள்ளிட்ட சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கனமழை காரணமாக சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் தேங்கியது. கழிவு நீரும் சேர்ந்தது.

இதனால், கோபமடைந்த நெட்டிசன்கள் அதனை வீடியோ பதிவு செய்து, நகரின் மோசமான திட்டமிடல் மற்றும் சாலை கட்டமைப்பு கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினர். இதனால், சமூக வலைதளங்களில் பெங்களூருவில் பெய்த மழை தொடர்பான படங்கள் குவிய துவங்கியது. ஒரு சில இடங்களில் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதை குறிப்பிட்ட டுவிட்டர் பயனாளர் ஒருவர், மாநகராட்சி திணறுவதாகவும், கோடை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் பூங்கா நகரம், நீண்ட மணி நேரத்திற்கு முன்னர் குப்பைகளின் நகரமாக மாறிவிட்டது என தெரிவித்துள்ளார்.