டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் தொடர்ந்து நேற்று வரை 301 நாட்களாக அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.

மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக அணை நீர் மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டும் ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி அணையில் இருந்து நீர் திறக்கப்படும்.
கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதியில் குறித்த நாளில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகள் கழித்து, நடப்பாண்டு வரும் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஆகஸ்ட் 13-ம் தேதி தான், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து கடந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்கு 151 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டது.

கடந்த 2005, 2006-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 427 நாட்கள் அணை நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்தது. கடந்த 14 ஆண்டு களுக்குப் பின்னர் நடப்பாண்டு அணை நீர் மட்டம் தொடர்ந்து 301 நாட்களாக 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 101.69 அடியாகவும், நீர் இருப்பு 67.04 டிஎம்சி-யாகவும் உள்ளது.