மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி சரிவு

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 2 அடி சரிந்துள்ளது

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 665 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 513 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 18 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 26-ந் தேதி 95.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 94.92 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 93.89 அடியானது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 93.89 அடியாகவும், நீர்இருப்பு 57.20 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,665 கனஅடியில் இருந்து 4,513 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.