தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் டெல்டா மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை ஆகியவற்றால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 99 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 7 ஆயிரத்து 556 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 103.52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 103.93 அடியாக இருந்தது. பின்னர் மாலையில் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.