எவ்வித பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்; செந்தில் தொண்டமான் தகவல்

உறுதியாக உள்ளோம்... ஜீவன் தொண்டமானும் நானும் எவ்விதமான முறுகலிலும் ஈடுபடக்கூடதென்பதில் எப்போதுமே உறுதியாக உள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜீவன் தொண்டமானும் நானும் எப்போதும் ஒரு பதவிக்கு போட்டி போட மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“ஜீவன் தொண்டமானும் நானும் எப்போதும் ஒரு பதவிக்கு போட்டி போட மாட்டோம். அது எமது கொள்கையாகவே உள்ளது. இருவரும் ஒரே பதவிக்கு போட்டி போட்டால் தான் ஒரு சிக்கல் நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
அந்தப் பதவிக்கு ஜீவன் தொண்டமான் போட்டி போடுவதாக இருந்தால் நான் போட்டி போட மாட்டேன். எனக்கிருக்கும் வேலைத்திட்டத்தை நான் முன்னெடுத்துச் செல்வேன். இந்த இடத்தில் பார்க்கும் போது செந்தில் தொண்டமானா, ஜீவன் தொண்டமானா என்பதில்லை முக்கியம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் என்றைக்குமே பிளவுபடாது இருக்க வேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு 80 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. இது எங்களது குடும்ப சொத்துக் கிடையாது. நாங்கள் அந்த அமைப்பில் உள்ள சேவகர்கள் தான். 80 வருட வரலாற்றில் எத்தனையோ பேரின் உடல் உழைப்பு, உயிரிழப்பு, எவ்வளவோ தியாகங்கள் உள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கட்டியெழுப்புவதில் அனைவரது ஒத்துழைப்புகளும் உள்ளது.

இது ஒரு குடும்ப சொத்து என்று அனேகர் ஒரு மாயையை வளர்த்து வைத்துள்ளனர். ஜனநாயக முறையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னோக்கிச் செல்லும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனையவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

அந்தவகையில் எதிர்காலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் எவ்வாறான கொள்கையில் கொண்டு சென்றார்களோ அதே கொள்கையில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பயணிக்கும்.” என அவர் கூறியுள்ளார்.