நிவர் புயலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நிவர் புயல் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் தெரிவித்திருப்பதாவது:- வடகிழக்கு பருவமழையை உன்னிப்பாக கவனித்து நேரடியாக களத்திலேயே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவாகி, இன்னும் வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே 25-ந் தேதி மாலையில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 80கி.மீ. முதல் 100கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கனமழை, மிக கனமழை, தீவிர கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் உத்தரவுபடி தற்போது 6 தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அரக்கோணத்திலிருந்து கடலூருக்கு சென்றுள்ளனர். 2 தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இங்கேயே இருக்கிறார்கள்.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் களஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் கண்காணிக்க வேண்டும்.

‘கஜா’ புயலின்போது ஒரு லட்சம் பேரை நிவாரண முகாம்களில் தங்க வைத்து, எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக புயல் கரையை கடந்தபோது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. டெல்டா மாவட்டங்களிலும் அமைச்சர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

‘கஜா’ புயலை சமாளித்தது போல ‘நிவர்’ புயலையும் எதிர்கொள்ள முதலமைச்சர் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.