போர் இல்லாத பகுதியில் இராணுவ படையினர் அதிகரிப்புக்கு காரணம் என்ன: சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்

தமிழர்களை ஒடுக்கவே இராணுவம் பிரசன்னம்... வடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்தில் தான், இராணுவத்தின் பிரசன்னம் இந்த பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், இதுவும் இன அழிப்பின் ஓர் அங்கமாகும் என்றும் விமர்சித்தார். அங்கு தொடர்ந்து பேசிய விக்னேஸ்வரன், ‘நாளுக்கு நாள் எம் மத்தியில் இராணுவப்பிரசன்னம் அதிகரித்து வருகின்றது.

போரில்லாத பகுதியில் படையினர் அதிகரிப்புக்கு காரணம் என்ன? இவ்வாறான செயல்களின் மூலம் தமிழர்களைக் கோபப்படுத்தி, அவர்களை எதிர்நிலைக்குக் கொண்டு சென்று, நிர்மூலமாக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா? எனச்சந்தேகப்பட வைக்கின்றது.

இது பற்றி கூட்டமைப்பினர் எந்தவித எதிர்ப்பையும் காட்டாதது மனதுக்கு வருத்தமாக உள்ளது. இன அழிப்பு என்பது தமிழர்களைக் கொல்வது மட்டுமல்ல. கலாசார இனவழிப்பு, கல்வி சார் இனவழிப்பு, பொருளாதார இனவழிப்பு, கட்டமைப்பு இனவழிப்பு என பலவுண்டு.

தமிழர் காணிகளை கபளீகரம் செய்யவும், சிங்கள மயமாக்கலை மேற்கொள்ளவுமே இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்படுகின்றது’ என்றார்.