திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? மத்திய அரசு வரும் 8ஆம் தேதி ஆலோசனை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஸ்தம்பித்துப் போய் இருந்தனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. கல்வி நிலையங்கள், திரையரங்குகள், தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது நாடு முழுவதும் எப்போது திரையரங்குகளை திறப்பது என்பது குறித்து வரும் 8ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை செய்ய இருப்பதாக அறிவிப்பு செய்துள்ளது.

திரையரங்க உரிமையாளர்களுடன் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு இந்த ஆலோசனையை நடத்துகிறது. இந்த ஆலோசனையின் முடிவில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளி வரலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்த இந்த ஆலோசனையில் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தென்னிந்திய திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.