உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தல்

சீனா: சீனாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி கொண்டு வருகிறது. இதனை அடுத்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் துணை வகை வைரஸ் தான் தற்போது சீனாவில் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவல் காரணமாக சீனாவின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.சீனாவில் இவ்வாறு பாதிப்புகள் அதிகரித்து வரும் வேளையில் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் இந்தியா உட்பட பல நாடுகளில் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, நெகட்டிவ் சான்றிதழ் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பேசிய சீனா, “கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. பிற நாடுகள் சீன நாட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது” என குற்றம் சாட்டியது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனா மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் மற்றும் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தியது. மேலும் கொரோனா நிலவரம் பற்றிய வெளிப்படையான தகவல்களை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.