குமரி மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் மழை கொட்டியது. குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1 அணை பகுதியில் 87.8 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவுகள் வருமாறு:- பூதப்பாண்டி-25.2மி.மீ., கன்னிமார்-11.2மி.மீ., கொட்டாரம்-1.2மி.மீ., மயிலாடி-5.4மி.மீ., நாகர்கோவில்-12.4மி.மீ., பேச்சிப்பாறை-33.6மி.மீ., பெருஞ்சாணி-8.8மி.மீ., புத்தன்அணை-8மி.மீ., சிற்றார் 2-73மி.மீ., சுருளக்கோடு-12.4மி.மீ., தக்கலை-2.1மி.மீ., பாலமோர்-64.6மி.மீ., மாம்பழத்துறையாறு-41மி.மீ., ஆரல்வாய்மொழி-6மி.மீ., கோழிப்போர்விளை-4மி.மீ., அடையாமடை-59மி.மீ., முள்ளங்கினாவிளை-7மி.மீ., ஆனைகிடங்கு-37.2மி.மீ., முக்கடல்-4.8மி.மீ. என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 521 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அது நேற்று 818 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் சிற்றார் 1, சிற்றார் 2 மற்றும் மாம்பழத்துறையாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. ஆனால் பரவலாக மழை பெய்ததால் நேற்று சிற்றார் 1 அணைக்கு 49 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 77 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 2 கனஅடியும் தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 197 கனஅடி தண்ணீர் வருகிறது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையிலிருந்து 468 கனஅடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 250 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணையிலி ருந்து 20 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.