பணிகளில் பெண்களை அமர்த்தக்கூடாது... அதிரடி உத்தரவிட்ட தலிபான் அரசு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களும் பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துமாறு தலிபான் அரசு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் உயர்கல்வி பெற தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

சர்வதேச எதிர்ப்புகளும் எழுந்தன. ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தலிபான் அரசு தனது கொள்கையில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களும் பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துமாறு தலிபான் அரசு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


இது தொடர்பாக, பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் காரி டின் முகமது ஹனிப் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த உத்தரவை பின்பற்றாத எல்லா தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் ஆப்கானிஸ்தானில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளது.