அற்புதமான சாதனத்தை கண்டுபிடித்து போலந்து விஞ்ஞானிகள் அசத்தல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்கள் என பலர் அயராது வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொருவரும் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வருகின்றனர்.

பி.பி.இ. என்று சொல்லப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்கள் அத்தனையையும் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் அவர்களை கொரோனா வைரஸ் 100 சதவீதம் தொற்றாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா நோயாளிகளுக்கு முன்நின்று சிகிச்சை அளித்த பல மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களுக்கு ஒரு அற்புதமான சாதனத்தை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரிமோட் வென்டிலேட்டரை கண்டுபிடித்து போலந்து விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். இதனை தொலைவில் இருந்து கொண்டே இயக்க முடியும்.

இது கொரோனா நோயாளிகள் சுவாசிப்பதற்கு பேருதவியாக இருக்கும். இந்த சோதனை மனிதர்களில் பாதுகாப்பாக செயல்படுவதை காட்ட முடிந்தால், டாக்டர்கள் நோயாளிகளின் சுவாசத்தை, செயல்பாடுகளை ஒரு செயலியின் மூலம் கண்காணிக்க முடியும். இதுகுறித்து இந்த திட்டத்தின் ஆலோசகராக செயல்பட்ட லூகாஸ் சார்பாக் கூறுகையில், ரெஸ்பிசேவ், ஒரு வழக்கமான வென்டிலேட்டரை விட குறைவான விலையில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இது தட்டுப்பாட்டை போக்கும் நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அடுத்த சில மாதங்களில் போலந்தில் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும்.