பிரேசில் அதிபர் கொரோனாவிலிருந்து விரைவில் குணமடைய உலக சுகாதார அமைப்பு வாழ்த்து

பிரேசில் நாட்டு அதிபராக உள்ள ஜெயிர் போல்சனரோவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என இவர் ஏற்கனவே பிரச்சாரம் செய்தார்.

பிரேசிலில் தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என ஜெயிர் போல்சனரோ தொடர்ந்து பேசி வந்தார்.

மக்களை சந்திக்கும் போதும், கூட்டங்களில் பங்கேற்கும் போதும் என அனைத்து தருணங்களிலும் முகக்கவம் அணியாமல் அலட்சியமாக இருந்ததை நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதன்பின்பே முகக்கவசம் அணிந்து வருகிறார். தற்போது அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உள்ளதால் வீட்டிலே தனிமைப்படுத்தி கொண்டார். தற்போது அவரது மனைவி மைக்கில் போல்சனரோவுக்கும் கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம், ’வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து உடனடியாக அலுவலக பணிகளுக்கு திரும்பி அதிபர் போல்சனரோ மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பிரேசில் அதிபர் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கில் ரயானும் கூறியுள்ளார்.