உலக அளவில் தெற்காசியாதான் வறுமையில் மோசமாகப் பாதிக்கப்படும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதரண சூழல் குறித்து லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை யுஎன்யு-டபிள்யுஐடிஇஆர் (UNU-WIDER) எனும் அமைப்புடன் சேர்ந்து ஆய்வு நடத்தியது. அதில் வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் குறித்த விபரம் வருமாறு:-

உலக அளவில் பாதிப்பை ஏறபடுத்திவரும் கொரோனா வைரஸால் உலக மக்களில் 100 கோடி பேர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நாள்தோறும் உலக அளவில் ஏழை மக்கள் 50 கோடி டாலர் அளவுக்கு வருமான இழப்பைச் சந்திப்பார்கள், அடுக்கு வரும் காலங்களில் வறுமையின் தீவிரம், பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

நடுத்தர வருமானம் ஈட்டும் வளரும் நாடுகளில் இந்த வறுமை கடுமையாக அதிகரிக்கும். தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளை நோக்கி உலக வறுமை திரும்பக்கூடும். தெற்காசிய நாடுகளில் ஏற்கெனவே வறுமையில் இருக்கும் மக்களில் 39.5 கோடி பேர் மேலும் மோசமான வறுமைக்குச் செல்வார்கள். உலக அளவில் தெற்காசியாதான் வறுமையில் மோசமாகப் பாதிக்கப்படும்.

நைஜிரியா, எத்தியோப்பியா, வங்கதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் 19 சதவீத வறுமையையும், காங்கோ, தான்சானியா, பாகிஸ்தான், கென்யா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் ஆகியவை 12 சதவீத வறுமையையும் ஏற்படுத்தும்.

ஜி7 நாடுகள், ஜி20 நாடுகளின் தலைவர்கள் உடனடியாக ஒன்று சேர்ந்து, உலக அளவில் கரோனாவால் ஏற்படும் ஏழ்மையைக்களைய 3 கட்ட திட்டங்களை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.