உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கியது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும் 90 லட்சத்து 31 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37 லட்சத்து 66 ஆயிரத்து 842 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 54 ஆயிரத்து 728 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவில் இருந்து இதுவரை 47 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 69 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,22,238 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 13,254 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.