ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா முறைப்படி தேர்வு

ஜப்பான் வரலாற்றிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்கிற பெருமையை பெற்ற ஷின்ஜோ அபே, சிறு வயது முதலே பெருங்குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஷின்ஜோ அபே தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். மேலும், புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் கூறியிருந்தார்.

ஜப்பானைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார். அதன்படி, ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த திங்கட்கிழமை நடந்தது. இதில் ஜப்பான் அமைச்சரவையின் தலைமைச் செயலாளரும் ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா 377 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் ஜப்பானின் புதிய பிரதமராவதும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை முறைப்படி தேர்வு செய்ய ஜப்பான் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்து. அப்போது அவர் அந்நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்ததோடு தனது மந்திரி சபையையும் பிரதமர் ஷின்ஜோ அபே கலைத்தார்.

ஷின்ஜோ அபேயின் அமைச்சரவையில் முக்கிய இடம்பிடித்த யோஷிஹைட் சுகா அவரது நம்பிக்கைக்குரிய நபராக மாறி அபேயின் வலது கரமாக விளங்கி வந்தார். தற்போது, ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு முன் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடான ஜப்பானும் பிற நாடுகளைப் போல கொரோனா காரணமாக கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது.