கொரோனா தொற்று வந்து விட்டதாக நினைத்து இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். அவருக்கு வயது 21. இந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கண்ணனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவர் தனக்கு கொரோனா தொற்று வந்து விட்டதாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களிடம் சொல்லி புலம்பியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் கண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நெடுநேரம் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கண்ணனைத் தேடி உள்ளனர் அப்போது இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று அவருடைய குடும்பத்தினர் பார்த்தபோது, இறந்தது கண்ணன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது

இளைஞர் கண்ணன் தனக்கு கொரோனா இருப்பதாக கருதி ரயில் முன் மோதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றி பரிசோதனைக்கு முன்பே இதுபோன்ற விபரீத முடிவை எடுப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.