Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தமிழ் திரையுலகில் வெற்றித் தயாரிப்பாளராக வலம் வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்

தமிழ் திரையுலகில் வெற்றித் தயாரிப்பாளராக வலம் வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்

By: Nagaraj Tue, 28 July 2020 3:34:12 PM

தமிழ் திரையுலகில் வெற்றித் தயாரிப்பாளராக வலம் வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்

வெற்றித் தயாரிப்பாளராக வலம் வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் பிறந்த நாள் இன்று. அவர் தமிழ் திரையுலகில் பல சாதனைகளைப் புரிந்த வெற்றிப்படங்களை தந்தவர்.

சுதந்திர இந்தியாவுக்கு முந்தையை வணிக குடும்பத்தின் சாதாரண இளைஞரான மெய்யப்பன் படிப்படியாக தமது ஆற்றலாலும் அனுபவத்தாலும் திரை உலகில் கோலோச்சியதே அவரது அளப்பரிய சாதனை. காரைக்குடி நகரத்தார் குடும்பத்தில் 1907ம் ஆண்டில் பிறந்த மெய்யப்பன். மிக இளம் வயதிலேயே சென்னைக்குக் குடிபுகுந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தினார். அந்த காலத்தின் கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு புகழ் பெற்ற இடமாக விளங்கியது சரஸ்வதி ஸ்டோர்.

1940 களில் திரைப்படத்துறையில் நுழைந்த மெய்யப்பன் ஆரம்பத்தில் இயக்கிய சில படங்கள் சரியாகப் போகவில்லை. ஆனால் மனம் தளராத அசாதாரண மனிதரான மெய்யப்பன் பல சவால்களை சந்தித்தார்.

av meyyappa chettiar,birthday,producer,track ,ஏவி.மெய்யப்ப செட்டியார், பிறந்தநாள், தயாரிப்பாளர், தடம்

1947ம் ஆண்டு மெய்யப்பன் தயாரித்து இயக்கிய நாம் இருவர் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தில் இடம் பெற்ற ஆடுவோமே பள்ளு பாடுவோமே உள்ளிட்ட பாரதியார் பாடல்கள் தேவகானங்களாக தமிழகமெங்கும் ஒலித்தன.

பாரதியார் பாடல்களுக்கான உரிமத்தை விலை கொடுத்து வாங்கிய ஏவிஎம், அப்போதைய தமிழக முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை ஒரு பைசா கூட வாங்காமல் நாட்டுடைமையாக்க கொடுத்ததன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய கொடையை அளித்த பெருமைக்கு சொந்தகாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இயக்குனராக இருந்ததால் ஒரு வெற்றி படத்திற்கு என்ன தேவை என்பதை அறிந்து தயாரிப்பாளராக மிகப்பெரிய அளவில் கோலோச்ச உதவியது.

av meyyappa chettiar,birthday,producer,track ,ஏவி.மெய்யப்ப செட்டியார், பிறந்தநாள், தயாரிப்பாளர், தடம்

அவர் தயாரித்த பராசக்தி திரைப்படம் இருபெரும் வல்லமைகளை தமிழ் திரை உலகத்திற்கு தந்தது. இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, நடிப்பில் உச்சத்தைத் தொட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரின் சாதனைகளும் உலகமே அறிந்த ஒன்று.

சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன்,. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான அன்பேவா, கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட 167 படங்களை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்துள்ளது. நடுத்தர குடும்ப நிகழ்வுகளை மையமாக வைத்து ஏவிஎம் தயாரித்த பல படங்கள் இன்றளவில் திரைக்காவியங்களாக நீடிக்கின்றன. அதில் குழந்தையும் தெய்வமும், சம்சாரம் அது மின்சாரம் படங்கள் மிக முக்கியமானவை.

தற்போதைய சூழலில் தமிழ் திரை உலகில் முறையான திட்டமிடல் இன்றி பிரமாண்டம் என்ற பெயரில் 4 படங்களை தயாரித்து விட்டு 5 வது படத்தை முடிக்க இயலாமல் விழிபிதுங்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏ.வி.எம் நிறுவனம் பதித்த தடம் மிக அழுத்தமானது. தமிழ் சினிமாவில் ஆலமரம் போல வேர்பரப்பி நிற்கும் ஏவிஎம் நிறுவனத்திற்கு விதையிட்ட வித்தகர் ஏ.வி.மெய்யப்பன் மறைந்தாலும் அவரது திரைபடங்கள் என்றென்றும் அவர் பெயர் சொல்லும் பிள்ளைகளாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Tags :