Advertisement

விபிஎப் கட்டண விவகாரம் குறித்து பாரதிராஜா அறிக்கை

By: Nagaraj Mon, 09 Nov 2020 8:23:16 PM

விபிஎப் கட்டண விவகாரம் குறித்து பாரதிராஜா அறிக்கை

பாரதிராஜா அறிவிப்பு... விபிஎப் கட்டண விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திரையரங்குகளில் தற்போது திரையிட வாய்ப்பில்லை என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நவ.,30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்தது. VPF கட்டணத்தை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரைப்படங்களின் 50 % வசூலை அளிக்க முன்வந்தால், VPF கட்டணத்தை பெறுவதை கைவிடுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டுவதற்காக இருதரப்பினரும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், தீபாவளிக்கு திரையரங்குகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பழைய வெற்றிப் படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து, திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

chennai,filmmakers,theaters,opening,bharathiraja ,சென்னை, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், திறப்பு, பாரதிராஜா

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்களுடனான ஆலோசனையில் எந்த முடிவும் எட்டப்படாததால், புதிய திரைப்படங்கள் தற்போதைக்கு திரையிட முடியாது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது VPF சம்மந்தமாக அனைத்து தரப்புகளின்‌ நிலைப்பாட்டின்‌ காரணமாக, புது திரைப்படங்கள்‌ வெளியிடுவதில்‌ சிக்கல்‌ நிலவி வருவது அனைவரும்‌ அறிந்ததே. இந்நிலையில்‌ தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும்,‌ சமீபத்தில்‌ மதிப்பிற்குரிய அமைச்சர்‌ கடம்பூர்‌ ராஜூ அவர்களும்‌, திரையரங்கு உரிமையாளர்களும்‌ கேட்டுக்கொண்டதற்‌கிணங்க, இந்த காலகட்டத்தை கருத்தில்‌ கொண்டு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தீர்வு ஒன்றை எங்கள்‌ நிலைப்பாட்டில்‌ இருந்து கீழிறங்கி முன்‌ வைத்தோம்‌.

எனினும்‌ பல கட்டங்களில்‌ பேச்சுவார்த்தை நடத்‌தியும்‌ சுமூகமான தீர்வு எட்டப்படாததால்‌, மீண்டும்‌ தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்ததில்‌, நல்ல தீர்வு ஏற்படும்‌ வரை புது படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்‌ என்பதை தெரிவித்து கொள்கிறோம்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Tags :