- வீடு›
- பொழுதுபோக்கு›
- எந்திரன் கதை வழக்கு: இயக்குனர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
எந்திரன் கதை வழக்கு: இயக்குனர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
By: Monisha Tue, 29 Sept 2020 4:02:56 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எந்திரன். இந்தத் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 1996ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் ஜூகிபா என்ற தலைப்பில் எழுதிய தொடர்கதையை தான் தன்னுடைய அனுமதி இல்லாமல் இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படமாக எடுத்து உள்ளதாகவும் இதனால் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஷங்கர் மற்றும் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவிப்பதற்கு எதிராக இயக்குனர் ஷங்கர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.