- வீடு›
- பொழுதுபோக்கு›
- `கலக்கிட்டடா கண்ணா’ என்று இயக்குனர் லோகேசை பாராட்டிய ரஜினி
`கலக்கிட்டடா கண்ணா’ என்று இயக்குனர் லோகேசை பாராட்டிய ரஜினி
By: Nagaraj Sun, 15 Oct 2023 10:57:20 PM
சென்னை: ரஜினியின் பாராட்டு... இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்துடன் இணையவிருக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் கதைக்கு ரஜினி வெளிப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் மூலமாக அறியப்பட்டவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம்வருபவர்.
இந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `லியோ’ திரைப்படம் அக். 19 திரையரங்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்பே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இணையவிருக்கும் தலைவர் 171 பற்றிய அறிவிப்பு வெளியாகியது.
தற்போது லியோ படத்திற்கான புரமோஷனில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான கதையைக் கேட்ட பிறகு ரஜினி கூறியதை யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
தலைவர் 171 படத்தின் கதையைக் கேட்ட பிறகு, ரஜினி, `கலக்கிட்டடா கண்ணா’ என தன்னை அணைத்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் லோகேஷ். மேலும், இந்தப் படம் அவரது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸுக்குள் வராது என்றும் தனிப்படமாகத் தான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் கதைக்கு மலையாள திரைக்கதை ஆசிரியர்களுடன் இணைந்து பணிபுரிய விரும்புவதாகவும் லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் 171 படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.