Advertisement

ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது... இன்று படம் ரிலீஸ்

By: Nagaraj Fri, 14 Apr 2023 08:28:07 AM

ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது... இன்று படம் ரிலீஸ்

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அறிவிக்கப்பட்டபடி இன்று ருத்ரன் படம் ரிலீஸ் ஆகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இயக்குநர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்த படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக ,படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனதுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ரெவன்ஸா குளோபல் நிறுவனம் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது.

இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும் எனக் கூறிய ருத்ரன் தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இப்படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

rudran film,judge,dubbing rights,case,theaters,ban lifted ,ருத்ரன் படம், நீதிபதி, டப்பிங் உரிமை, வழக்கு, திரையரங்கள், தடை நீக்கம்

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இடைக்காலத் தடையால் தங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவன ஃபைவ்ஸ்டார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, தடையை நீக்க வேண்டுமென படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்க கூடாது எனவும் பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ள உத்தரவிட்டார். மேலும், ருத்ரன் படத்தைத் திரையரங்கம், ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி ருத்ரன் திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது.

Tags :
|
|