- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஓடிடியில் வெளியாகும் யோகிபாபு-வின் படம்!
ஓடிடியில் வெளியாகும் யோகிபாபு-வின் படம்!
By: Monisha Sun, 28 June 2020 11:41:49 AM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இப்போதைய சூழலில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து எந்த சாத்தியமும் இல்லை. எனவே வேறு வழியின்றி ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்களான ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘காக்டெயில்’ ஓடிடியில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த மார்ச் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜீ5யில் வரும் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படமான ’காக்டெயில்’ என்ற திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய முருகன் இயக்கத்தில், சாய் பாஸ்கர் இசையில், நவீன் ஒளிப்பதிவில், பாசில் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
திரையரங்குகள் திறக்க தாமதமானால் மாஸ் நடிகர்கள் திரைப்படங்கள் உள்பட இன்னும் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.