தனியார் நிறுவனத்தில் 662 லேப்-டாப்களை கொள்ளையடித்த 11 பேர் கைது
By: Nagaraj Wed, 09 Sept 2020 3:08:06 PM
சார்ஜாவில் தனியார் நிறுவனத்தில் 24 லட்சம் திர்ஹாம் மதிப்புள்ள 662 லேப்-டாப்களை கொள்ளையடித்த 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சார்ஜா குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஒமர் அகமது போல்ஜாவுத் கூறியதாவது:
சார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அதிக அளவில் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இங்குள்ள சேமிப்பு கிடங்குகளில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் வர்த்தக பொருட்களை சேமித்து வைத்துள்ளன. அவ்வாறு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் சேமிப்பு கிடங்கு உள்ளது.
அங்கு லேப்-டாப்களை காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து
குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை மற்றும்
கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின்
இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த வீடியோ பதிவுகள்
அடங்கிய டிஜிட்டல் கருவியையும் காணவில்லை. அங்கு கைரேகை உள்ளிட்ட எந்த ஒரு
தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் லேப்-டாப்கள்
எங்காவது முறையற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணித்து
வந்தனர். இதில் அங்கு ஒரு நபரிடம் மொத்தமாக நூற்றுக்கணக்கான லேப்-டாப்கள்
விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
பின்னர் அந்த நபர் அளித்த
அடையாளத்தின் பேரில் 11 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் அந்த பகுதியை ஏற்கனவே நோட்டமிட்டு வந்து, காவலாளி யாரும் இல்லை
என்பதை உறுதி செய்து அந்த லேப்-டாப்களை ஏற்றி செல்ல ஒரு வாகனத்தையும்
திருடி வந்துள்ளனர்.
ஆசிய நாடுகளை சேர்ந்த அந்த நபர்களிடம் இருந்து
24 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.4 கோடியே 80 லட்சம்) மதிப்பிலான
662 லேப்டாப் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.