Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையிலிருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையிலிருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

By: vaithegi Sat, 15 Oct 2022 6:58:40 PM

மேட்டூர் அணையிலிருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சேலம்: 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் ... மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பியதை தொடர்ந்து அன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வந்ததால் மறுநாள் (13-ந் தேதி) 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனை அடுத்து நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 33 ஆயிரத்து 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் வினாடிக்கு 200 கனஅடியாக குறைக்கப்பட்டது.

mettur dam,water ,மேட்டூர் அணை,தண்ணீர்


இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலையில் 85 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் தற்போது 1.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் நீர் வரத்து காரணமாக, நீர் திறப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை தரப்பில் அறிவுறுத்தியுள்ளது.

Tags :