தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
By: Nagaraj Sat, 16 Sept 2023 11:10:06 AM
தஞ்சாவூர்: தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் செல்லப்பா (42). இவர் மீதும், பூதலூர் தாலுகா செய்யாமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவி (32) என்பவர் மீதும் பல வழக்குகள் உள்ளன.
இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா, திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு ஆவணங்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் இடம் தாக்கல் செய்தனர்.
இந்த ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து செல்லப்பா, சஞ்சீவி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து செல்லப்பா, சஞ்சீவியை காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.