Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் கோவிட் தொற்றால் கடந்த மாதம் 239 பேர் உயிரிழப்பு

சீனாவில் கோவிட் தொற்றால் கடந்த மாதம் 239 பேர் உயிரிழப்பு

By: vaithegi Fri, 07 July 2023 5:08:18 PM

சீனாவில் கோவிட் தொற்றால் கடந்த மாதம் 239 பேர் உயிரிழப்பு


சீனா: ஜூன் மாதத்தில் 239 பேர் பலி ... சீனாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் மே மாதத்தில் 164 பேரும், ஜூன் மாதத்தில் 239 பேரும் பலியானதாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கோவிட் தொற்று பாதித்த நபர் கண்டறியப்பட்டார். இதையடுத்து 2020 தொடக்கத்தில் சீனா ஜீரோ கோவிட்(“zero-COVID”) திட்டத்தை அமல்படுத்தியது. மிகக்கடுமையான கோவிட் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டங்கள் எனக் கெடுபிடிக்களை விதித்தது.

ஒரே ஒருவருக்கு தொற்று உறுதியானாலும் ஒட்டுமொத்த பகுதிக்குமே கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. கடுமையான ஊரடங்குகள், குவாரன்டைன்கள், கட்டாய கும்பல் பரிசோதனைகள், ஒரு வயது குழந்தைகள் வரை தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துதல், எல்லைகள் மூடல் என்று அரசு காட்டிய கெடுபிடிகளால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சீனப் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்தது. ஒருகட்டத்தில் மக்கள் சீன அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 2022 டிசம்பரில் சீனா கரோனா தடுப்பு கெடுபிடிகளை வெகுவாகத் தளர்த்தியது. ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செயல்படுத்தாமல் கெடுபிடிகளைத் தளர்த்தியது. இதனால் குறுகிய காலத்தில் 60 ஆயிரம் பேர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தனர். 2023 ஜனவரி, பிப்ரவரியில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கைகள் உச்சம் கண்டன. குறிப்பாக ஜனவரி 4 -ம் தேதி ஒருநாள் அதிகபட்ச உயிரிழப்பாக 4,237 கோவிட் மரணங்கள் பதிவாகின. ஆனால் அதன்பின்னர் உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்தன. பிப்ரவரி 23 ஆம் தேதி கோவிட் உயிரிழப்புகளே இல்லாத நாள் என சீன அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்தது.

casualty,covid ,உயிரிழப்பு ,கோவிட்

இந்நிலையில் ஜூன் மாதம் கோவிட் தொற்று உயிரிழப்புகள் 239 பதிவானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலை தொடருமா என்பது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த 239 பேரில் 2 உயிரிழப்புகள் மட்டுமே கோவிட் தாக்கத்தால் நுரையீரல் செயல்படாததால் நிகழ்ந்தன. மற்ற உயிரிழப்புகள் கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கு சர்க்கரை நோய், இதய பாதிப்புகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் பாதிப்புகள் இருந்ததால் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் நிகழ்ந்தன என கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி 3, 2022 முதல் ஜூலை 5, 2023 வரை சீனாவில் 9,92,92,081 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 1,21,490 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரசு உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags :