Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாபநாசம் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு

பாபநாசம் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு

By: Monisha Sat, 19 Dec 2020 11:57:51 AM

பாபநாசம் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு

கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சில அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

அதன்படி, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்தது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 142.40 அடியை எட்டியது. தொடர்ந்து அணை முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி இரண்டு ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. பின்னர் உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 3,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

monsoon,dam,water level,overflow,waterfall ,பருவமழை,அணை,நீர்மட்டம்,உபரிநீர்,அருவி

இதேபோன்று 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் நேற்று காலையில் 148.95 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அந்த அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதியம் 1.00 மணி நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது அகஸ்தியர் அருவிக்கு மேல் பகுதியில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாபநாசம் படித்துறையில் சுவாமி மண்டபம், விநாயகர் கோவில் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஆற்றில் குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அம்பை, விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. ராமநதி, கடனாநதி அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே, மாவட்ட கலெக்டர் வி‌‌ஷ்ணு நேற்று பாபநாசம் அணைக்கும், அகஸ்தியர் அருவிக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags :
|