Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 4½ லட்சம் லாரிகள் நிறுத்தம்

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 4½ லட்சம் லாரிகள் நிறுத்தம்

By: Monisha Tue, 08 Dec 2020 3:12:55 PM

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 4½ லட்சம் லாரிகள் நிறுத்தம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த பத்து நாட்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரியும், விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் 4.5 லட்சம் லாரிகள் இயங்காது என நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் உள்பட மாநிலத்திற்குள் இயக்கப்படும் பெரும்பாலான லாரிகளும் காலை 6.00 மணி முதல் ஓடவில்லை. இந்த லாரிகள் செட்களிலும், சாலையோரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

farmers,struggle,support,trucks,stoped ,விவசாயிகள்,போராட்டம்,ஆதரவு,லாரிகள்,நிறுத்தம்

இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி , இரும்பு தளவாடங்கள், ஜவ்வரிசி, கல்மாவு, காய்கறிகள் தேக்கம் அடைந்தன. மேலும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு, வெங்காயம், பூண்டு, கோதுமை ஆகிய பொருட்களும் வரவில்லை. லாரிகள் நிறுத்தப்பட்டதால் ஒரு லாரிக்கு ரூ.2 ஆயிரத்திற்கு மேல் லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் இயக்கப்படும் 4½ லட்சம் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கி உள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாலை 6.00 மணிக்கு மேல் வழக்கம் போல லாரிகள் இயங்கும் என அவர் தெரிவித்தார்.

Tags :
|