பொலிவியாவில் தங்கச் சுரங்கங்களில் இருந்து 57 பேர் கைது
By: Nagaraj Sun, 16 July 2023 4:32:58 PM
பொலிவியா: அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தங்க சுரங்கங்களில் இருந்து 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிவியாவில் சட்டவிரோதமாக இயங்கிவரும் தங்க சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய ராணுவத்தினர் அதில் ஈடுபட்ட 57 பேரை கைது செய்தனர்.
அமேசான் காடுகள் வழியாகப் பாயும் ஆறுகளுக்கு அடியில் உள்ள மணற்பரப்பில் தங்கத் துகள்கள் கலந்திருப்பதால் அந்த மணலை டிரெட்ஜெர் படகுகள் மூலம் அள்ளி, தங்கத் துகள்களை சலித்தெடுக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழலும், மீன்களின் இனப்பெருக்கமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெனி என்ற பகுதியில் போலீசாரும், ராணுவமும் இணைந்து 6 நாட்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 டிரெட்ஜர் படகுகளை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். இதை கண்டித்து சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.