Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் ஊடுருவல் தொடர்பாக இன்று விரிவான அறிக்கை தாக்கல்

லடாக் ஊடுருவல் தொடர்பாக இன்று விரிவான அறிக்கை தாக்கல்

By: Nagaraj Tue, 15 Sept 2020 09:05:32 AM

லடாக் ஊடுருவல் தொடர்பாக இன்று விரிவான அறிக்கை தாக்கல்

இன்று விரிவான அறிக்கை தாக்கல்... லடாக் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லோக்சபாவில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தியா- சீனா மோதல் தொடர்பாக மத்திய அரசு வெளியிடும் முதலாவது அதிகாரப்பூர்வ அறிக்கை என்பதால் இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லடாக்கின் கிழக்குப் பகுதியில் கடந்த மே மாதம் முதல் சீனா அத்துமீறி ஊடுருவி வந்தது. இதன் உச்சமாக ஜூன் 20-ந் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிக்க முயற்சித்தது.

சீனாவின் இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 60-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதுவரை சீனா இதனை உறுதி செய்யவில்லை.

lok sabha,ladakh infiltration,defense,report ,லோக்சபா, லடாக் ஊடுருவல், பாதுகாப்புத்துறை, அறிக்கை

இந்த மோதலுக்குப் பின்னர் எல்லையில் யுத்த பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் சீனாவுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதும் சீனா வீரர்கள் ஊடுருவல் முயற்சிகளை கைவிடவில்லை. ஆனால் எல்லையில் இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதனிடையே மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இந்த மாநாடுகளின் போது சீனாவின் அமைச்சர்களுடன் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி- உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் 5 முக்கிய அம்சங்களுடன் கூடிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதும் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது.

இதில் லடாக் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். இந்த பிரச்சனையை லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பியும் இருந்தார்.

இந்த நிலையில் லோக்சபாவில் லடாக் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறார். சீனாவுடனான பதற்றங்களுக்குப் பின்னர் இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம், அறிக்கைகள் தரப்பட்டது. ஆனால் முதல் முறையாக மத்திய அரசு சீனா விவகாரம் தொடர்பாக அளிக்க இருக்கும் முதல் அறிக்கை இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எதிர்பார்ப்புக்கு உரியதாகவும் இது கருதப்படுகிறது.

Tags :