பாதயாத்திரையாக சென்ற சிறுவனை தாக்கி இழுத்து சென்று சிறுத்தை
By: Nagaraj Fri, 23 June 2023 8:36:38 PM
திருப்பதி: சிறுவனை தாக்கி இழுத்து சென்று சிறுத்தை... திருப்பதியில் இருந்து திருமலைக்கு பெற்றோர்களுடன் பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை சிறுத்தைப்புலி அடித்து இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். மலைப்பாதையில் உள்ள ஏழாவது மைல் அருகே சென்ற போது அவர்களுடைய ஐந்து வயது மகன் கவுசிக்கை வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை புலி பாய்ந்து அடித்து இழுத்து சென்றது.
இதனைக் கண்ட பெற்றோர், உறவினர்கள், பக்தர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் கற்கள், கம்பு, கட்டை ஆகியவைகளை எடுத்து சிறுத்தை புலி மீது வீசி எறிந்தனர். இதனால் பயந்து போன சிறுத்தைப்புலி சிறுவனை அடர்ந்த வனப்பகுதியில் போட்டு விட்டு ஓடி மறைந்து விட்டது.
தொடர்ந்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.