தாயிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற சென்ற பெண் விபத்தில் பலி
By: Nagaraj Mon, 08 May 2023 10:30:57 AM
சென்னை: பிறந்த நாளிலேயே இறந்த சோகம்... சென்னையில் தாயிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற ஊபர் பைக் டாக்ஸியில் சென்ற பெண் அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்கு மாம்பலத்தில் தனது தோழியுடன் வசிக்கும் 34 வயதான சேவிகா ஒப்பணை கலைஞராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது பிறந்தநாளையொட்டி வியாசர்பாடியில் வசிக்கும் தனது தாயாரை சந்திக்க ஊபர் பைக் டாக்ஸியில் சென்ற நிலையில், தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் ஊபர் பைக் ஓட்டியவர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட, தலைகவசம் அணியாமல் பின்னால் அமர்ந்திருந்த சேவிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நிற்காமல் டிப்பர் லாரியுடன் தப்பிச் சென்ற ஓட்டுநரை சிசிடிவி பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.