Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரவாயல்-வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அதிரடி உத்தரவு

மதுரவாயல்-வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அதிரடி உத்தரவு

By: Monisha Tue, 22 Dec 2020 11:43:02 AM

மதுரவாயல்-வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம். சத்யநாராயணன் சென்னை மதுரவாயல்-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையை முறையாகப் பராமரிக்கவில்லை என்று ஒரு கடிதம் எழுதினார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலையை சீரமைக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் வரை இரண்டு வாரங்களுக்கு, இந்தச் சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், சாலையில் உள்ள குண்டு குழிகள் மூடப்பட்டு சரிசெய்யப்பட்டு விட்டது என்றும் தற்போது ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்துவருவதால் சாலையை மீண்டும் புதிதாக அமைக்க இயலாது என்று கூறினார். இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. நீதிபதி சத்யநாராயணன் குறுக்கிட்டு, ‘சொந்த வேலைக்காக சனிக்கிழமை வேலூருக்கு சென்றுவிட்டு நேற்றுதான் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்பினேன். அப்போது நெடுஞ்சாலையில் ஏராளமான குண்டு குழிகள் இருந்தன. பெயரளவில் மட்டுமே சீர்செய்யும் பணிகள் நடந்துள்ளன’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

highway,maintenance,toll booth,toll,case ,நெடுஞ்சாலை,பராமரிப்பு,சுங்கச்சாவடி,கட்டணம்,வழக்கு

மேலும், ‘முறையாகப் பராமரிக்காத நெடுஞ்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று எந்த சட்டம் கூறுகிறது? எனவே 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டிக்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறினார். அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை வக்கீல், ‘6 வழிச்சாலை அமைக்கும் பணியை 2013-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ரூ.650 கோடி மதிப்பீட்டில் புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 6 வழிச்சாலை பணிகள் துரிதமாக நடந்துவருவதால், 50 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலிக்கவேண்டும் என்ற உத்தரவை நீட்டிக்கக்கூடாது’ என்று வாதிட்டார்.

உடனே நீதிபதிகள், ‘6 வழிச்சாலை அமைக்கத் திட்டமிட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இத்திட்டம் எப்போதும் முடிக்கப்படும்? இது யாருடைய பணம்? இந்த நெடுஞ்சாலையில் உள்ள இருங்காட்டுக்கோட்டையில் ஏராளமான வெளிநாட்டு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வரும் வெளிநாட்டு நபர்கள் இந்தச் சாலையை பயன்படுத்தும்போது நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், ‘இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புதான் முக்கியம். இந்தச் சாலை சீரமைப்புப் பணியில் தரம் மிகக் குறைவாக உள்ளது. அதனால் மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை வருகிற ஜனவரி 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடுகிறோம். அதேபோல, மழைநீர் வடிகாலில் விழுந்து தனியார் கல்லூரி பேராசிரியை மற்றும் அவரது மகள் பலியான சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
|