Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க. பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணை... அடுத்த வாரம் நடைபெறும்... சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணை... அடுத்த வாரம் நடைபெறும்... சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

By: vaithegi Fri, 22 July 2022 3:38:40 PM

அ.தி.மு.க. பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணை... அடுத்த வாரம் நடைபெறும்... சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11-ந்தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இதனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதை அடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்றிருந்தார். அப்போது இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அதே நேரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

supreme court,a.d.m.k ,சுப்ரீம் கோர்ட்டு ,அ.தி.மு.க

மேலும் அவருடன் அவரது ஆதரவாளர்களான வைத்தி லிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் நீக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள், ஆதரவாளர்களை அடுத்தடுத்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். பதிலுக்கு ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறினார். இதனால் இருதரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது.

இதன் இடையே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகத்தை திறந்து சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி அ.தி.மு.க. அலுவலகம் திறக்கப்பட்டு அதன் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், பொதுக்குழு கூட்டத்தை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடரந்து பொதுக்குழுவை கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும் என்கிற விதி கடை பிடிக்கப்படவில்லை. எனவே பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேல்முறையீட்டு வழக்கை திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. அ.தி.மு.க. கட்சியின் மொத்த வடிவமும் மாற்றப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. மேலும் வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது. எனவே கடந்த 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லுமா? என்பது அடுத்த வாரம் தெரியவரும்.

Tags :