கனமழையால் சென்னையில் விமான சேவை பாதிப்பு...பயணிகள் அவதி
By: Nagaraj Mon, 14 Aug 2023 7:37:42 PM
சென்னை: கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா மற்றும் துபாய் விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து பிற நகரங்களுக்குச் செல்லும் 10 விமானங்கள் தாமதமாக வந்தன.
மேலும், துபாய், மும்பை, பாரிஸ் செல்லும் விமானங்களும் சில மணி நேரம் தாமதமாக வந்தன. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.