நிலைமைகள் வழமைக்கு திரும்பிய பின்னரே விமான சேவைகள்; அமைச்சர் தகவல்
By: Nagaraj Sun, 17 May 2020 10:27:27 AM
விமான சேவைகளை ஆரம்பிக்க தயார் நிலை... சுகாதார அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்தினால், அடுத்த 12 மணி நேரத்தில் சகல விமான சேவைகளையும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
எனினும் நிலைமைகள் மோசமாக இருக்கின்ற காரணத்தினால் இப்போது பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்க வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார். மேலும் விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவருவது குறித்து இன்னமும் சரியான திகதி ஒன்று தீர்மானிக்கப்படவில்லை.
ஏதோ ஒரு விதத்தில் கொரோனா வைரஸ் நோய் சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்பதை கண்டறிய மாதிரி பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை சில உலக நாடுகளின் அனுபவத்திற்கு அமைய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் இரண்டாவது அலை தொடர்பான ஆபத்து நீங்கவில்லை என்பதால், அதற்கு பொருத்தமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் வைரஸ் தொடர்பில் பதில் வழங்கும் தொழிற்நுட்ப பிரிவின் பிரதானி மருத்துவர் மரியா வேங் தெரிவித்துள்ளார்.
ஒப்பீட்டு அளவில் கொரோனா வைரஸ் தடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக கூறியுள்ள அவர், உலகில் பல இடங்களில் அந்த வைரஸ் மீண்டும் ஒரு முறை பரவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.