அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு
By: Nagaraj Sat, 16 May 2020 11:47:03 AM
அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை... 'பணியில் உள்ள போலீசார் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்ட, போலீசாருக்கு, இலகுவான பணி ஒதுக்கப்படுகிறது. அவர்களில், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் இருப்போருக்கு, விடுமுறை தரப்பட்டுள்ளது. இதனால், 80 சதவீத போலீசார் மட்டுமே, பணியில் உள்ளனர். இவர்களுக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இதுவரை மாநிலம் முழுவதும் இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 150க்கும் மேற்பட்ட போலீசாருக்கு, தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், சிறப்பு காவல் படை மற்றும் காவலர் பயிற்சி மையங்களிலும், பலருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: போலீசார் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, மண்டல ஐ.ஜி.,க்கள் வாயிலாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தார் ஆரோக்கியமாக இருந்தால் தான், அவர்களால் முழு மனதுடன் பணிபுரிய முடியும்.
அத்துடன், ஆபத்து நேரங்களில், காவல் துறை போன்ற படைகள், தயாராக இருப்பது அவசியம். அதனால், ஒவ்வொரு போலீஸ்காரரும், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.