ஆஸ்திரேலிய விஞ்ஞானி கண்டறிந்த மருந்து கொரோனா இறப்புகளை தடுக்க உதவும் என தகவல்
By: Nagaraj Fri, 12 June 2020 7:38:26 PM
ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ள இரத்த உறைதல் எதிர்ப்பு மருந்து கொரோனா இறப்புகளை தடுக்க உதவும் என்று தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது வரை கொரோனாவுக்கு இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. கொரோனா வராமல் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதா என்றால் அதுவும் பரிசோதனைகள் அளவில்தான் உள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் சிட்னி பல்கலைக்கழகத்தின் இருதய ஆய்வு மைய விஞ்ஞானி ஷான் ஜாக்சன் (Shaun Jackson) சோதனை முயற்சியாக இரத்த உறைதல் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளார். இது ரத்தம் திட்டுகளாக உறைவதை தடுப்பதாக கூறப்படுகிறது.
மூச்சுத்திணறல், உறுப்புகள் செயலிழத்தல், பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்டவற்றுக்கு இரத்தம் உறைதல் காரணம் என்பதால், கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து பலனளிக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஐசியூ.வில் உள்ள கொரோனா நோயாளிகளில் 4 ல் 3 பேருக்கு இரத்த உறைவு ஏற்படுவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.