Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளில் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப ..அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப ..அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

By: vaithegi Tue, 19 Sept 2023 12:21:14 PM

பள்ளிகளில் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப ..அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்திருக்கின்றன.அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இச்சீரழிவுக்கு காரணமாகும்.தமிழக அரசப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் பற்றிய 2022ம் ஆண்டுக்கான ஆண்டு கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report-ASER) அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் 59.1% விழுக்காட்டினருக்கு தமிழ் எழுத்துக்களைக் கூட படிக்கத் தெரியவில்லை; 31.1% விழுக்காட்டினருக்கு எழுத்துகளைப் படிக்கத் தெரிந்தாலும் சொற்களை படிக்கத் தெரியவில்லை;

42 விழுக்காட்டினருக்கு 1 முதல் 9 வரையிலான எண்களைக் கூட அடையாளம் காணமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், 5-ம் வகுப்பு மாணவர்களில் 25.20 விழுக்காட்டினராலும், ஏழாம் வகுப்பு மாணவர்களில் 51.30 விழுக்காட்டினராலும் தான் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடிகிறது; மூன்றாம் வகுப்பினரில் 95.20 விழுக்காட்டினரால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை.இந்தியாவிலேயே இந்த அளவுக்கு மோசமான கல்வித்தரம் தமிழகத்துல் தான் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.8-ம் வகுப்பு மாணவர்களில் 74.50% பேருக்கு 11 முதல் 99 வரையிலான எண்களைத் தெரியவில்லை; 71.40% மாணவர்களுக்கு கழித்தல் தெரியவில்லை; 42.20 விழுக்காட்டினருக்கு எளிமையான ஆங்கில வாக்கியங்களை படிக்கத் தெரியவில்லை எனவும் கல்வி நிலை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

2018ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டு கல்வி நிலை அறிக்கையின் கண்டுபிடிப்புகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்கவில்லை என்றாலும் கூட, அரசு பள்ளிகளின் கல்வித் தரம் சீரழிந்து வருவதை உறுதி செய்ய ஆதாரங்கள் உள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் சீரழிந்து வருவதற்கு முதன்மைக் காரணம் ஆசிரியர்கள் பற்றாக்குறை தான்.அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். அதே நிலை தொடர வேண்டுமானால், அரசு பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு யார் கற்பிப்பார்கள்? பாடங்களே நடத்தாமல் மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு அதிகரிக்கும்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு தெரிவித்தது. 700-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்குடன் நடப்பாண்டில் 6553 இடை நிலை ஆசிரியர்கள், 3587 பட்டதாரி ஆசிரியர்கள் என்று மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

எனவே அதன்படி கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு நடைமுறைகள் இந்நேரம் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், கல்வியாண்டு முடிந்து புதிய கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு கூட இன்னும் வெளியிடப்படவில்லை என்பதிலிருந்தே அரசின் அக்கறையை புரிந்து கொள்ள முடியும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 13,331 என்பது அரசின் கணக்கு தான். உண்மையான கணக்கு அதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். தமிழகத்துல் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான்.

anbumani ramadoss,vacancies,schools ,அன்புமணி ராமதாஸ், காலிப் பணியிடங்கள்,பள்ளிகள்

இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப் பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடு நிலைப் பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இது 2022ம் ஆண்டு மே மாத நிலவரம் ஆகும். அதன்பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டால் அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும்.

அவை தான் உண்மையாக காலிப் பணியிடங்கள் ஆகும். வகுப்புக்கு ஆர் ஆசிரியர் என்பது அடிப்படைத் தேவை ஆகும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப் பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும்? இக்கேள்வியை தமிழக அரசில் உள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே எழுப்பி, அதற்கு விடை காண விரும்பினால், சீரழிவுப் பாதையில் செல்லும் அரசு பள்ளிகள், அதிலிருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பது உறுதி.

தமிழகத்துல் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அடுத்தக் கட்டமாக வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமிக்க இலக்கு நிர்ணயித்து, அதை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அவர் அதில் கூறியுள்ளார்.




Tags :