Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எந்த பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்

எந்த பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்

By: Nagaraj Tue, 13 Oct 2020 1:58:30 PM

எந்த பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்... தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. தமிழக அரசுடன் எந்தப் பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா கூறியதாவது: உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இடம்பெற செய்யும் வகையில் மத்திய அரசு சில பல்கலைக் கழகங்களைத் தேர்வு செய்தது. கடந்த 2014-15-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியால் சீா்மிகு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அண்ணா பல்கலைக்கழமும் தோவு செய்யப்பட்டது.

2017-இல் உயா் கல்வித் துறைச் செயலராக இருந்த சுனில் பாலிவால் தலைமையிலான நிா்வாகக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை, வருங்கால செலவினம் ஆகியவற்றைத் தயாரித்து, மாநில அரசின் அனுமதியுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அளித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு நான் பதவியேற்ற பின்னா் பல்கலைக்கழகத்துக்கு சீா்மிகு அந்தஸ்து அளிக்கும் குழுவின் தலைவா் கோபால்சாமியிடம் விளக்கம் அளித்தேன்.

description,anna university,letter,government,vice-chancellor ,விளக்கம், அண்ணா பல்கலைக்கழகம், கடிதம், அரசு, துணைவேந்தர்

அதைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீா்மிகு அந்தஸ்து அளிக்க ஒப்புதல் அளித்தனா். நிதி ஒப்புதலுக்கு மாநில அரசின் ஒப்புதல் கடிதம் தேவை என்பதால், தமிழக அரசின் அமைச்சா்கள் குழுவிடம் 5 முறை விளக்கம் அளித்துள்ளேன். அதேவேளையில் முதல்வரையும் சந்தித்து விளக்கம் அளித்தேன். அப்போது தமிழக அரசுக்கு அளித்த விவரங்களையே, மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்.

அரசுக்குத் தெரியாமல் எந்தவித கடித பரிமாற்றத்தையும் நான் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனக் கடிதம் மூலமாக, தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, சீா்மிகு அந்தஸ்தை ஏற்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலா், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளா்களிடம் எடுத்துக் காட்டிய துணைவேந்தா் சூரப்பா தொடா்ந்து கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீா்மிகு அந்தஸ்து கிடைப்பதால், பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும்.

இந்த நிதி, பல்கலைக் கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடா்பு போன்ற பல வளா்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். மாணவா்களின் கல்வித்தரம் உயரும்.

இந்த பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே மனிதவளத்துறையின் நோக்கம். தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம். அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. இந்த விவகாரத்தில் தனக்கோ, அரசுக்கோ, அமைச்சருக்கோ இடையே எந்தவித பிரச்னையும் இல்லை' என்றாா்.

Tags :
|