வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத எம்.பி., விமலுக்கு பிடியாணை
By: Nagaraj Tue, 14 Mar 2023 08:51:49 AM
கொழும்பு: எம்.பி., விமலுக்கு பிடியாணை... வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, பிரதிவாதிகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்தும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பில் நடைபெறும் விசாரணைக்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது, சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.