Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்: தஞ்சை கலெக்டர் உத்தரவு

பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்: தஞ்சை கலெக்டர் உத்தரவு

By: Nagaraj Thu, 06 July 2023 09:02:26 AM

பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்: தஞ்சை கலெக்டர் உத்தரவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளாகத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் தென்மேற்கு பருவமழை 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் பேசியதாவது; தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிரவாகம் சார்பில் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும்.

thanjavur collector,instruction,south west monsoon,should be faced ,தஞ்சாவூர் கலெக்டர், அறிவுறுத்தல், தென்மேற்கு பருவமழை, எதிர்கொள்ள வேண்டும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி அமைத்திட வேண்டும் என்றும் வருவாய்த்துறையினர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் நியமித்து ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை. மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத் துறை. தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்பு துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும் நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும் உயிர்சேதம் கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், நீர்வளத்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags :