Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போயஸ்கார்டன் வீட்டுச்சாவியை கேட்டு தீபக் கோர்ட்டில் வழக்கு

போயஸ்கார்டன் வீட்டுச்சாவியை கேட்டு தீபக் கோர்ட்டில் வழக்கு

By: Nagaraj Fri, 17 July 2020 10:48:45 AM

போயஸ்கார்டன் வீட்டுச்சாவியை கேட்டு தீபக் கோர்ட்டில் வழக்கு

சென்னையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுச் சாவியை கேட்டு அவரது அண்ணன் மகன் தீபக் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளைக் கைவிட்டு, வீட்டுச் சாவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வாரிசான தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், “வேதா நிலையம் வீடு எனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டு, எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் எழுதி வைக்கப்பட்டது. போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என எந்த கட்டத்திலும் ஜெயலலிதா தெரிவித்ததில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

boissardin,house,trial,petition,nephew ,
போயஸ்கார்டன், இல்லம், விசாரணை, மனுதாக்கல், அண்ணன் மகன்

தமிழக அரசு போயஸ் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதுகுறித்த தனது மற்றும் தனது சகோதரி தீபாவின் ஆட்சேபங்களையும் அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள எங்களின் கருத்துகளைக் கூற எந்த வாய்ப்பும் வழங்காமல் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீஸ்களை ரத்து செய்து, அதற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் வேதா நிலையத்தின் சாவியை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தீபக் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்னிலையில் நேற்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவேறு தீர்ப்புகள் வருவதைத் தவிர்க்கும் வகையில், இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார். இதன்படி, வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

Tags :
|
|