போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகைக்கு ஜாமீன்!
By: Monisha Wed, 07 Oct 2020 4:59:14 PM
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இருந்தபோது அவரது மரணத்துக்கு ரியா தான் காரணம் என்று சுஷாந்த்சிங்கின் தந்தை குற்றம் சாட்டினார். இதுகுறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே திடீரென நடிகை ரியா போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றுடன் அவருடைய நீதிமன்ற காவல் நிறைவுக்கு வந்ததை அடுத்து சிறப்பு நீதிமன்றம் காணொளி மூலம் அவரது வழக்கை விசாரித்து மேலும் 14 நாட்கள் காவலை நீடித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நடிகை ரியா மும்பை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற போது ரியா சக்கரவர்த்திக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை அடுத்து இன்னும் அவர் ஒரு சில மணி நேரங்களில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.