Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரிக்குள் பஸ்களை இயக்கலாம் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரிக்குள் பஸ்களை இயக்கலாம் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

By: Monisha Mon, 01 June 2020 1:00:25 PM

புதுச்சேரிக்குள் பஸ்களை இயக்கலாம் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க புதுவையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக நேற்று மாலை கேபினட் அறையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவை ஜூன் மாதம் 30-ந் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். தற்போது கடைகளின் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.

வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதன்படி வரும் 8-ந் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

puducherry,cm narayanasamy,next action,shrines,factories ,புதுச்சேரி,முதல்வர் நாராயணசாமி,அடுத்தகட்ட நடவடிக்கை,வழிபாட்டுத் தலங்கள்,தொழிற்சாலைகள்

வரும் 8-ந்தேதி முதல் பொதுமக்கள் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம். வணிக வளாகமும் அன்றைய தினம் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். புதுச்சேரியில் விமான சேவைகளை தொடங்கவும் அனுமதி அளிப்போம்.

புதுச்சேரி கடற்கரை பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படும். சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், மது பார்களை திறக்க அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவையின்றி பிற மாநிலத்தவர்கள் புதுச்சேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம், தொழிற்சாலை பணிகள், விவசாய பணிக்காக புதுச்சேரிக்கு வரலாம். புதுச்சேரிக்குள் பஸ்களை இயக்கலாம். தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களை கொண்டு பணி செய்யலாம். அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் பணி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :