Advertisement

விசாரணைக்கு ஆஜராக சமீர் வான்கடேவுக்கு சிபிஐ சம்மன்

By: Nagaraj Fri, 19 May 2023 4:34:51 PM

விசாரணைக்கு ஆஜராக சமீர் வான்கடேவுக்கு சிபிஐ சம்மன்

மும்பை: நடிகர் ஷாருக் மகன் ஆர்யன்கான் விவகாரத்தில் சமீர் வான்கடே விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை, போதைப் பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறி, போதைப் பொருள் தடுப்பு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட சொகுசு கப்பலில் ட்ரக்ஸ் பார்ட்டி நடப்பதாக, போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சொகுசு கப்பலில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இது சம்பந்தமாக, போதை பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆர்யன் கான் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

wankhede,investigation,cbi summons,sent,shah rukh ,வான்கடே, விசாரணை, சிபிஐ சம்மன், அனுப்பியது, ஷாருக்

இச்சம்பவத்தில், ஆர்யன் கான் மீது வழக்கு தொடராமல் இருக்க, அவரைக் கைது செய்த முன்னாள் என்சிபி அதிகாரி வான்கடே உட்பட மூன்றுபேர், 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு ஷாருக்கான் தரப்பு மறுப்பு தெரிவித்த நிலையில், கடைசியாக 18 கோடி ரூபாய் இறுதியாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, முதலில் 50 லட்ச ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் அது திரும்ப வழங்கப்பட்டதாகவும் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வான்கடே ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்கி விற்பனை செய்துள்ளதும், அளவுக்கதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று சமீர் வான்கடே விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|