Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைமை செயலகத்தில் மத்தியக் குழுவினர்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தலைமை செயலகத்தில் மத்தியக் குழுவினர்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

By: Monisha Tue, 08 Dec 2020 1:34:07 PM

தலைமை செயலகத்தில் மத்தியக் குழுவினர்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

வங்கக்கடலில் கடந்த மாதம் 24-ந் தேதி உருவான நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் ஏராளமான பயிர்களும் சேதம் அடைந்தன. இந்த புயல் பாதிப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக புரெவி புயல் உருவானது.

இந்த புயல் தமிழகத்தை நெருங்குவதற்கு முன்பே வலுவிழந்துவிட்டது. ஆனாலும் கடலூர், நாகை, மயிலாடுதுறை, சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

இந்நிலையில் நிவர் புயல் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மத்தியக்குழுவினர் 5-ந் தேதி சென்னை வந்தனர். தலைமை செயலகம் சென்று தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்தனர். அதன் பிறகு மத்திய குழுவினர் இரண்டு பிரிவாக சென்று வெள்ள சேதபகுதிகளை பார்வையிட்டனர். ஒரு குழுவினரை வேளாண்மைதுறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அழைத்து சென்று வெள்ளசேத பகுதிகளை காண்பித்தார். அதன்பிறகு புதுச்சேரி மாநிலத்திலும் வெள்ளசேத பகுதிகளை ஆய்வு செய்தனர்.

storm,damage,flood damage,inspection,central committee ,புயல்,பாதிப்பு,வெள்ளசேதம்,ஆய்வு,மத்தியக்குழுவினர்

இதேபோல் மற்றொரு குழுவினர் பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் மணிவாசன் வழிகாட்டுதல்படி காசிமேடு, எண்ணூர், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளசேதங்களை பார்வையிட்டனர். அதன் பிறகு மத்தியக்குழுவினர் நேற்றிரவு சென்னை திரும்பினார்கள்.

இன்று காலை தலைமை செயலகம் சென்ற மத்தியக் குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மழை சேதங்கள் குறித்து விவாதித்தனர். ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி கிடப்பதால், மழை வடிந்த பிறகு முழுமையாக சேதங்களை கணக்கிட்டு தரும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்தியக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இதுவரை தாங்கள் பார்த்த பகுதிகளில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு வைத்துள்ளதாகவும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் எடுக்கப்பட்ட சேத விவரப்பட்டியலை மத்தியக் குழுவினரிடம் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட மத்தியக்குழுவினர் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தனர். மத்தியக்குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு உரிய வெள்ள நிவாரண நிதியை ஒதுக்கும் என தெரிகிறது.

Tags :
|
|