Advertisement

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

By: Monisha Sat, 17 Oct 2020 09:25:45 AM

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

tamil nadu,weather,rainfall,low pressure area,hurricane winds ,தமிழ்நாடு,வானிலை,மழை,காற்றழுத்த தாழ்வு பகுதி,சூறாவளி காற்று

வரும் 19-ம் தேதி (நாளை மறுதினம்) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதனால் 18-ம் தேதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 19-ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 20-ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :