Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 99 வயதான சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ரூ.17 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

99 வயதான சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ரூ.17 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

By: Monisha Thu, 10 Dec 2020 11:24:51 AM

99 வயதான சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ரூ.17 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியான கபூர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர். 99 வயதான இவர், வறுமையின் காரணமாக ஓய்வூதியம் கேட்டு கடந்த 1997-ம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால் இவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் கொரில்லா படையில் பணியாற்றினேன். அப்போது, ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டேன். வறுமையின் காரணமாக தியாகி ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், ஓய்வூதியத்துக்காக 99 வயது முதியவரை ஐகோர்ட்டை நாடவைத்த அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்றார். பின்னர், மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

freedom,fighter,pension,case,government ,சுதந்திரப்போராட்டம்,தியாகி,ஓய்வூதியம்,வழக்கு,அரசாணை

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தியாகி கபூருக்கு மாதந்தோறும் ரூ.17 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு கடந்த 5-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது என்றார். மேலும் அந்த அரசாணையையும் தாக்கல் செய்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக அரசின் அரசாணையுடன் விண்ணப்பம் செய்தால், மனுதாரருக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, ‘தமிழக அரசின் முடிவு திருப்தி அளிக்கிறது. அரசாணையின்படி மனுதாரருக்கு நடப்பு மாதத்திலிருந்து ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும். இதை அமல்படுத்தி அதுதொடர்பான அறிக்கையை வருகிற ஜனவரி 3-வது வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசின் அரசாணை உள்ளிட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பிவைக்க வேண்டும். அதை மத்திய அரசு இரண்டு மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

Tags :
|